தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் 2-வது ஆண்டாக காணும்பொங்கல் விழா களையிழந்தது.
தமிழகம் முழுவதும் 700 இடங்களில் வாகனதணிக்கைச் சாவடிகள் அமைத்தும், 1,300 இடங்களில் தடுப்புகள் அமைத்தும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களில் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபாரதம் விதித்தனர்.
கடந்த 15-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றதாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 329 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.44 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் 1,910 வழக்குகளும், பொது இடங்களில் அதிகம் பேர் கூடியதற்காக 1,552 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 10,000 போலீஸார்
சென்னையில் 312 இடங்களில் வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே நடமாடியவர்கள், முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.