ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அபார வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தல் நடந்த 9 மாவட்ட ஊராட்சி மற்றும் 74 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுகிறது. மாவட்ட, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 6, 9 ஆகிய தேதி களில் இரு கட்டங்களாக நடந்தன. அத்துடன், இதர 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத் தேர்தலும் 9-ம் தேதி நடந்தது.

இரு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்ததாலும், ஒவ்வொருவரும் 4 வாக்குகளை செலுத்தி இருந்ததாலும் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட் டது. நேற்று முன்தினம் காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, நேற்று மாலை வரை நீடித்தது.

இந்தத் தேர்தலில் பெரும் பாலான இடங்களை திமுக பிடித் துள்ளது. 9 மாவட்டங்களிலும் மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் 137 இடங் களை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. அதிமுக 2 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 993 இடங்களை திமுக கூட்டணி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 216 வார்டுகள் கிடைத்துள்ளன. தனித்துப் போட்டியிட்ட பாமக 34 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக அக்கட்சி அறிவித் துள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு வரும் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கிறது. பெரும்பாலான இடங்களை பிடித்துள்ள திமுக, 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் 74 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுகிறது. துணைத் தலைவர் பதவிகளும் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முதல்வர் பெருமிதம்

தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் மகத்தான வெற்றியை பெற்று வரும் செய்தி, கடந்த 5 மாத திமுக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று. சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது. கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போனது அதிமுக. நிதி நெருக்கடி இருந்தாலும் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம். நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்தான் உள் ளாட்சித் தேர்தல் வெற்றி.

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. நீங் கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வரு கிறது. இனியும் நிறைவேற்றி தரப் போகிறது. எத்தகைய நல்ல திட்டங் களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதை குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே. அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையட்டும்.

நீதிமன்றத்தில் நியாயம் பெறுவோம்: ஓபிஎஸ் – இபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு மட்டுமான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடந்தால் நியாயமான முறையில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அதனால், ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக சொன்ன அனைத்து கோரிக்கைகளும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அரசு உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்தது.

தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக இருந்த போதிலும் அதை தன் கைப்பாவையாக திமுக மாற்றியுள்ளது. அக்.4-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், திமுக வேட்பாளர்கள் பட்டியலை பெற்று, வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் சொல்லும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களிடம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றும். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுகவுக்கு சாதகமாக பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே தொடங்கியுள்ளது. பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றாலும் உடனடியாக அறிவிக்கவில்லை. சான்றிதழ் வழங்கவும் அதிகாரிகள் மறுத்துள்ளனர். பல இடங்களில் வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே அதிமுக தாக்கல் செய்துள்ள வழக்கில், இந்த சட்ட விதிமீறல்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து நியாயம் பெறுவோம். இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்றது என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன், ஜனநாயகத்தின் முன் வெளிப்படுத்துவோம்.