மின் கட்டணத்தில் சலுகை பெற விரும்புவோர், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், சொந்த வீடு வைத்திருக்கும் சிலர், வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு 3, 4, மின் இணைப்பு பெற்று குறைவான கட்டணமே செலுத்துகின்றனர். இதனால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இலவச மின்சார முறைகேட்டைத் தவிர்க்க, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த விவரம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. குடிசையில் வாழ்வோருக்கு, விவசாயப் பணிகளுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு என 6 வகை மானியத் திட்டங்களில் இலவசம் மற்றும் சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த சலுகைகளைப் பெற, தகுதியான நுகர்வோர், ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மானியம் பெறாத மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமில்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பவர்கள், பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவே, ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.