‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் செல்வராகவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் 2-3 வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏமாற்றம் தந்தது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கென பிரத்யேகமான ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகி காலப்போக்கில் பலராலும் கொண்டாடப்படும் ‘கல்ட்’ திரைப்படமாக தற்போது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கூட தமிழகம் முழுக்கப் பல்வேறு திரையரங்குகளில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடப்பட்டது. இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பது பற்றி இயக்குநர் செல்வராகவன் தெரிவிக்கவில்லை.

கடந்த சில வருடங்களாகப் படத்தைப் பற்றிய பிம்பம் ரசிகர்கள் மத்தியில் மாறியதால் இரண்டாவது பாகம் எப்போது என்ற கேள்வி இயக்குநர் செல்வராகவனிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில் கடந்த ஜனவரி மாதம் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் அதற்கென் ஒரு போஸ்டரையும் செல்வராகவன் வெளியிட்டார். அதில் தனுஷ் நடிப்பதாகவும், படம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ பெரிய படம் என்பதால் தயாரிப்பாளர்கள் அதற்கான ஆய்வுப் பணி மற்றும் முன் தயாரிப்புப் பணிகளுக்காக பல கோடி ரூபாயைச் செலவிட்டதாகவும், மேலும் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் கையை மீறிச் செல்வதால் படத்தைக் கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்தச் செய்திகளுக்கு இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார். தனது பதிவில் அவர், ”அந்த மர்மமான முன் தயாரிப்புப் பணிகள் எப்போது நடந்தன? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார்? தயவுசெய்து உங்களுக்கு செய்தி கொடுப்பவர்களிடம் கேட்கவும்” என்று கூறியுள்ளார்.

தற்போது கீர்த்தி சுரேஷுடன் ‘சாணிக் காயிதம்’, விஜய்யுடன் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.