சென்னை: பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது.
இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு துணை புரியும் உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் 175-ஐ முக்கியத்துவமற்ற துறை நிறுவனங்களாக அறிவித்துள்ள மத்திய அரசு, அவற்றில் சிலவற்றை மட்டும் தொடர்ந்து நடத்தலாம். 60 நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கலாம்; மீதமுள்ளவற்றை மூடி விடலாம் என்று தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
குறிப்பாக உரம் மற்றும் ரசாயன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 9 பொதுத்துறை நிறுவனங்களில் சென்னை உர நிறுவனம், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம், அசாம் மாநிலம் நம்ரூப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் ஆகிய மூன்றையும் தனியார்மயமாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
சென்னை உர நிறுவனம், திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம், பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் ஆகிய மூன்றையும் தனியார்மயமாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன. இந்த நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமாக உள்ள அனைத்து பங்குகளையும் தனியாரிடம் விற்று விடலாமா? அல்லது அவை பொதுத்துறை நிறுவனங்களாகவே நீடிக்கும் வகையில் 51% பங்குகளை அரசு வைத்துக் கொண்டு மீதமுள்ள பங்குகளை தனியாருக்கு வழங்கலாமா? என்பது பற்றி மூன்று நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களிடம் கடந்த ஏப்ரல் 5&ஆம் தேதி கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில் கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், 3 நிறுவனங்களின் தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உரத்துறையை முக்கியத்துவமற்ற துறையாக அறிவித்தது சரியல்ல. உற்பத்தித்துறையில் வலிமையாக உள்ளது; சேவைத்துறையில் கொடிகட்டி பறக்கிறது என்றாலும் கூட, இந்தியா அடிப்படையில் வேளாண்மை நாடு ஆகும். இந்தியாவில் 49% மக்கள் இன்னும் விவசாயத்தை தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இயற்கை விவசாயம் முக்கியத்துவம் பெற்று வருகிறது; வேளாண் பரப்பு குறைந்து வருகிறது என்றாலும் கூட, இந்தியா அதன் உள்நாட்டு உணவுத் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்வதுடன் வெளிநாடுகளுக்கு கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதற்கு காரணம் உரத்தின் அடிப்படையிலான விவசாய முறைகள் தான்.
இயற்கை விவசாயத்தின் பரப்பளவு அதிகரித்து வந்தாலும் கூட, உரத்தின் அடிப்படையிலான உழவு தான் இந்தியாவின் உணவுத் தன்னிறைவுக்கு அடிப்படையாகும்.
இன்றைய நிலையில் பெருமளவிலான உரங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஸ்பேட் வளம் அதிகம் இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு, பொட்டாஷ் தவிர்த்த பிற உரங்களின் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு பெற முடியும். அதற்காகவும், உரச்சந்தை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதை உறுதி செய்யவும் பொதுத் துறையில் அதிக எண்ணிக்கையிலான உர நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்வதற்கு பதிலாக, பொதுத்துறை உர நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது நியாயமற்றது.
இந்தியாவில் அனைத்து வகையான உரங்களுக்கும் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது; உரங்கள் மீது விலைக் கட்டுப்பாடும் உள்ளது. காலப்போக்கில் மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்பட்டால், உர நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வழங்க முடியும்.
தனியாரிடமிருந்தால் உரங்களின் விலை கடுமையாக உயர்த்தப்படும் என்பதால், தனியார்மயமாக்கல் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். 3 பொதுத்துறை உர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளும் காலப்போக்கில் பறிக்கப்படக்கூடும்.
பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.