தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் 1,268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 33ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 23 ஆயிரத்து 827 பேர் அதாவது 70.97% தடுப்பூசி செலுத்தாதவர்கள். முதல் டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்தியவர்கள் 6,020 பேர் அதாவது 17.93% பேர் ஆவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3,728 பேர் அதாவது 11.1% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டவர்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனை ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2,915 பேர். இவர்களில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் 2,161 அதாவது 74.14% பேர் ஆவர். முதல் டோஸ் மட்டும் தடுப்பூசி செலுத்தி ஐசியு பிரிவில் சிகிச்சைப் பெற்றவர்கள் 510 அதாவது 17.49%. இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 244 பேர் அதாவது 8.37% பேர் ஆவர்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33 ஆயிரத்து 575 பேரில் 1,268 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் தகவல்களை ஆய்வு செய்த போது இவர்களில் 1,129 அதாவது 89.04% தடுப்பூசியே செலுத்தின் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 94 பேர் அதாவது 7.41% ஆகும். இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 45 பேர் அதாவது 3.55  சதவிகிதம் என்பது தெரியவந்துள்ளது.