பொய் வழக்கில் தன்னை கைதுசெய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார்.

பிரதமர், உள்துறை அமைச்சர்…

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ரவி உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மக்களிடம் செல்வாக்கு உள்ள நான், ஆளுங்கட்சியினரை பொதுவெளியில் விமர்சித்து வந்தேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, ராயபுரத்தில் கள்ள ஓட்டுபோட்ட, திமுகவைச் சேர்ந்தவரைப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தோம்.

அவர் ராயபுரம் போலீஸில் எனக்கு எதிராகப் புகார் அளித்தார். அந்த பொய் புகாரின் அடிப்படையில், துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையிலான போலீஸார் என் வீட்டில் நுழைந்து,கட்டாயப்படுத்தி கைது செய்தனர். அப்போது என்னுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸார், உடை மாற்றிக் கொள்ளவும், மருந்துஎடுத்துக் கொள்ளவும்கூட அனு மதிக்கவில்லை.

சிறையில் வசதி இல்லை

என்னை நள்ளிரவில் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறையில் எனக்கு முதல்வகுப்பு வசதி தருமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். ஆனால், என்னை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.அங்கு எந்த வசதியும் தரப்படவில்லை.

சில நாட்களுக்குப் பின்னரே புழல் சிறைக்கு மாற்றப்பட்டேன். ஜாமீன் பெற்று திருச்சியில் தங்கியிருந்தபோது, தொண்டர்கள் என்னை சந்தித்தனர். இதனால் அங்கு என் மீதும், தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திமுக அரசு மீதும், என்னைக் கைது செய்த துணை ஆணையர் உள்ளிட்டோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.