பாஜக மாவட்டத் தலைவர்கள் சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாவட்டத் தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொதுச் செயலாளர்கள் கரு.நாகராஜன், ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 54 மாவட்டங்களின் தலைவர்கள், மாவட்டப் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தை தொடங்கிவைத்து அண்ணாமலை பேசியபோது, ‘‘மாவட்டத் தலைவர்களின் இதுவரையிலான செயல்பாடுகளை மதிப்பிடவும், இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை திட்டமிடவும் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய 15-க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்கள் தங்களது செயல்பாடுகள், தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளால் ஏற்படும் நெருக்கடிகள், கட்சி செலவுக்கு நிதி திரட்டுவதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து பேசியுள்ளனர்.

பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்

அவர்களுக்கு பதில் அளித்துப் பேசிய அண்ணாமலை, ‘‘பிரச்சினைகளை காரணம் காட்டி கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாவட்டத் தலைவர்கள் என்ன பிரச்சினை என்றாலும், தயங்காமல் என்னிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காண வேண்டும்.

இதுவரை நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்படும். கட்சி வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம்காட்டாத, சிறப்பாக செயல்படாத மாவட்டத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். அடுத்த ஒரு மாதத்தில், 3 மாதங்களில், 6 மாதங்களில், ஓராண்டில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும்.

வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மட்டுமல்லாமல், 2024 மக்களவைத் தேர்தல் பணிகளையும் இப்போதே தொடங்கவேண்டும்’’ என்று அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.