பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், பழனி தண்டாயுத பாணி கோயிலுக்கு, கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த பலர் 220 ஏக்கர் சொத்துகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை கண்டறிந்து மீட்க வேண்டும். தானமாக வழங்கப்பட்ட இந்த சொத்துகள் எங்கு இருக்கின்றன என்பதை கண்டறிய முடியவில்லை. அவற்றை அடையாளம் கண்டு மீட்கக் கோரி அளித்த மனுவின் அடிப்படையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், அதன்பின்னர் இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கோயிலுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக, அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சொத்துக்களை அடையாளம் கண்டு, மீட்பது தொடர்பான கூட்டத்தை, பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 9-ம் தேதிக்குள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டார். இந்த சொத்துகளை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.