ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு எதிராகவும், ஆப்கனிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூருவில் படிக்கும் ஆப்கனிஸ்தான் மாணவர்கள் கடந்த இரு தினங்களாக பெங்களூரு மாநகராட்சி அலுவலக சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தற்போதைய தலிபான் அரசுக்கு எதிராக‌வும், தலிபான்களின் ஜனநாயக விரோத செயலுக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் மாணவர் ஃபர்ஹான் பஷீர் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் மக்களில் கணிசமானோரும், நாங்களும் தலிபான்களுக்கு எதிரானவர்கள். தலிபான்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொன்று வருகின்றனர். இது மனித உரிமைக்கு எதிரானது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் தலிபான்களை ஆதரிக்கிறது. இந்த இரு நாடுகளின் தொடர்பை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கிலேயே மாணவர்கள் இந்தியா, ஜெர்மனி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். தலிபான்களின் பயங்கரவாத போக்கை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் அண்டை நாடுகளிலும் அவர்கள் நுழைந்துவிடுவார்கள். பின்னர் அதன் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும்.

இவ்வாறு ஃபர்ஹான் பஷீர் கூறினார்.