தமிழக மக்கள் மீது ரூ.6 லட்சம் கோடி கடன் சுமையை கடந்த அதிமுக அரசு சுமத்தியது என, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோட்டூர், பொள்ளாச்சி, சுந்தராபுரம், செல்வபுரம், வடவள்ளி, துடியலூர், சூலூர், பீளமேடு ஆகிய இடங்களில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 9 மாதங்களாக சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். இந்த இட ஒதுக்கீட்டை அளித்தது திமுக அரசு. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்தஅதிமுகவுக்கு தைரியமும் இல்லை.

கரோனா முதல் அலை வந்த அதிமுக ஆட்சியில், வெறும் ஒரு கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டிருந்தது. கரோனா 2-வது அலை இருந்த இக்கட்டான சூழலில், திமுக ஆட்சியை அமைத்தது. 9 மாதத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த அதிமுக அரசு தமிழக மக்கள் மீது ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்றது.

இக்கட்டான சூழலில் பொறுப் பேற்ற திமுக அரசு, வாக்குறுதி அளித்தபடி கரோனா நிவாரணத் தொகை ரூ.4 ஆயிரம் அளித்தது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சட்டப்பேரவை முடக்கப்படும் என்று பேசி வருகிறார். இந்த ஆட்சி மக்களின் ஆதரவு, அன்பு, வாக்கைப் பெற்று அமைந்துள்ள மக்களாட்சி. இது திமுக ஆட்சி. பழனிசாமியின் உருட்டல், மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். நீங்கள் பாஜகவுக்கு பயப்படுவது போல, நாங்கள் யாருக்கும் பயப்படமாட்டோம். திமுக தலைவர் அறிவித்தபடி, ஊழல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மக்கள் இந்த முறை தெளிவாக திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தில், அமைச்சரும், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி தனி மாவட்டமாகும்

பொள்ளாச்சியில் உதயநிதிஸ்டாலின் பேசும்போது,‘‘பொள்ளாச்சி அதிமுக கோட்டை எனபொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். இந்த தேர்தலில் பொள்ளாச்சி திமுக கோட்டை என நிரூபித்துக் காட்டுவோம். பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவோம்’’ என்றார்.