இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை ரூ.155 என உயர்த்தியுள்ளது. இது தமிழகம் உட்பட பல்வேறு மாநில சர்க்கிளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியும் நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்தச் சூழலில் ஏர்டெல் அந்த குறைந்தபட்ச கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக ரூ.99 என இருந்தது. தற்போது அந்த கட்டணத்தை ரூ.155 என உயர்த்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, மொத்தமாக 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள். முன்பிருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை காட்டிலும் தற்போது அந்த கட்டணம் 57 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ரீசார்ஜ் வருவாயில் இந்த மினிமம் ரீசார்ஜ் மூலம் சுமார் 7 முதல் 8 சதவீதம் வரை இருப்பதாக தெரிகிறது. ஏஆர்பியு எனப்படும் ஒவ்வொரு பயனர் இடமிருந்தும் ஈட்டும் சராசரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலத்தில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் கடந்த 2022 நவம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உட்பட சில டெலிகாம் சர்க்கிளில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.155 என உயர்ந்துள்ளது. ஏர்டெல் வழியில் இன்னும் பிற டெலிகாம் நிறுவனங்கள் இணையலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 22 டெலிகாம் சரக்கிள் இருப்பதாக தகவல்.