ஒமைக்ரான் பரவல் எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 6 விமானநிலையங்களில் வந்திறங்கும் போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக புறப்படும்முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் விமானநிலையங்களில் வந்து இறங்கும் எச்சரி்க்கைப்பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்காக முன்பதிவு செய்வது கட்டாயம்.

ஒருவேளை பிசிஆர் பரிசோதனைக்காக முன்பதிவு செய்யாமல் எந்தப் பயணியாவது இந்த 6 விமானநிலையங்களுக்கு புறப்பட்டால் அவர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியி்ட்ட எச்சரிக்கைப் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், சீனா, கானா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, இஸ்ரேல் ஆகியவை அடங்கும்

மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பி்ல் “ ஏர் சுவிதாவில் மாற்றம் செய்யபப்பட்டுள்ளதால், பயணிகள் எச்சரி்க்கைப் பட்டியலில் நாடுகளில் இருந்துவரும்போது, அல்லது கடந்த 14 நாடுகளுக்கு முன் இந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டு வேறு நாட்டிலிருந்து வரும்போதும் அங்கிருந்து புறப்படும்முன்பே ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

ஏர் சுவிதா தளத்தில் உள்ள பயணிகளுக்கான விண்ணப்ப படிவத்தில் அனைத்துவிவரங்களையும் வழங்கிட வேண்டும். டெல்லி, கொல்கத்தா, மும்பை,சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் விமானநிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் பிசிஆர் பரிசோதனை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை, கட்டுப்பாடு டிசம்பர் 20ம் தேதி முதல்(இன்று) நடைமுறைக்கு வருகிறது.

ஒருவேளை பயணி பிசிஆர் பிரசோதனைக்கு முன்பதிவு செய்யாமல் அல்லது முன்பதிவு செய்வதில் சிரமங்களைச் சந்தித்து அதனால் முன்பதிவு செய்யாமல் விமானத்தில் ஏறினால் அவர் பயணம் செய்ய அனுமதி்க்கப்படமாட்டார். ஒருவேளை அவர் பயணம் செய்துவிட்டால், சம்பந்தப்பட்ட விமானநிறுவனத்தின்அதிகாரிகள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானநிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தபின், அந்த முடிவுகள் கிடைத்தபின்பு அதில்நெகட்டிவ் இருந்தால் மட்டுமே விமானநிலையத்தை வி்ட்டு பயணிகள் வெளியே செல்லமுடியும்.