அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டபேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.9) உரையாற்றினார். அந்த உரையில், “பல்வேறு துறைகளில் தமிழ்நாடு நமது நாட்டில் உள்ள மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு அண்மையில் மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள சமூக வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் (Social Progress Index) 63.3 புள்ளிகளைப் பெற்று, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், பிற்படுத்தப்பட்டோர் போன்றோருக்கு அதிகாரமளித்து, அவர்களின் நலன் காத்துள்ள இந்த திராவிட வளர்ச்சிப் பாதையில் இந்த அரசு மேலும் உத்வேகத்தோடு தொடர்ந்து பீடுநடை போடும்.

இந்த வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது முதல்வர் அயராத உழைப்போடும், அக்கறையோடும் இந்த அரசை வழிநடத்தி வந்துள்ளார். இந்த வகையில், அண்மையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகை நடத்திய ‘மாநிலங்களின் நிலை’ என்ற ஆய்வு, சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று முடிவு செய்துள்ளது. இந்தச் சாதனை, நம் முதல்வரின் ஆற்றல்மிக்க தலைமைக்கும், சமூக நீதியையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும்.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக 2,429 கோடி ரூபாய் செலவில் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், ஒவ்வோர் அரிசி அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், ஒரு முழு செங்கரும்பும் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டு, இன்று அதனை தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உவகையுடன் தமிழர் திருநாளைக் கொண்டாடிட இது பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன்.

மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழையை அரசு சிறந்த முறையில் கையாண்டதால், சென்னை மாநகரில் அதன் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, 261 கி.மீ. நீளமுள்ள மழைநீர் கால்வாய்கள் மற்றும் இதர வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்காக 1,335 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 209 கி.மீ. நீளமுள்ள கால்வாய்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

கொசஸ்தலையாற்றில் 360 கி.மீ. நீளத்திற்கு மிக முக்கிய மழைநீர் கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த காலங்களில் அதிகளவில் மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளான சென்னை மாநகரின் முக்கியமான பகுதிகள், இந்தப் பருவ மழைக்காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்படைந்தன. மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறைக்கப்பட்டு, மாநகரம் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. மாண்டஸ் புயலையும் வடகிழக்குப் பருவ மழையையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட இந்த அரசிற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் இந்த அரசு, தமிழ்மொழியின் உரிமையைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அலுவல் மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுத்து சரக்கு மற்றும் சேவை வரி முறையில் இணைந்தன. ஆனால், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வரிவளர்ச்சி வீழ்ச்சி அடைந்ததால், மாநிலங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்நிலையில், 30.06.2022-ம் நாளுடன் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்கும் காலம் முடிவடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து மாநிலங்களின் வருவாய் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இழப்பீடு வழங்கும் காலத்தினை குறைந்தபட்சம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்துகின்றது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.