திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை (மே 13) தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.

புவிசார் குறியீடு பெற: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அசைவ உணவுகளில் பிரியாணி பிரசித்திப்பெற்றது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆம்பூர் வழியாக செல்லும் ஏராளமானோர் ஆம்பூர் பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். சாமான்ய மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆம்பூர் பிரியாணியை விரும்புகின்றனர்.இந்நிலையில், ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மே 13-ம் தேதி (நாளை) முதல் வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பிரியாணி திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

பிரியாணி திருவிழா:ஆம்பூர் வட்டம், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, குறைந்த விலையில், நிறைவாக பிரியாணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி பிரியாணி, கோழி பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணி, முட்டை பிரியாணி, நாட்டு கோழி பிரியாணி என 24 வகையான பிரியாணி பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவிருந்தது.

மாட்டிறைச்சிக்கு அனுமதி இல்லை:பல்வேறு வகையான பிரியாணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள மாவட்ட நிர்வாகம் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்தது. ஆம்பூரில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி பிரியாணி அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டாலும், மாட்டிறைச்சி பிரியாணியை விரும்பி சாப்பிடுவோர் அதிகமாக இருப்பதால் மாட்டிறைச்சி பிரியாணிக்கும் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்கினால், அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு அனுமதி கேட்பார்கள் என்பதால், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி பிரியாணியை தவிர மற்ற இறைச்சி வகைகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக அறிவிப்பு வெளியிட்டது.மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெருபான்மையான மக்கள் விரும்பும் உணவு வகைகளில் மாட்டிறைச்சி பிரியாணியும் இருப்பதால் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கும் அனுமதி வழங்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள், எஸ்டிபிஐ கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

மாவட்ட நிர்வாகம் ஆய்வு: ஆனால், மாவட்ட நிர்வாகம் தன் அறிவிப்பில் பிடிவாதமாக இருந்து, ஆம்பூர் பிரியாணி திருவிழாவை வெற்றிக்கரமாக நடத்த ஆயத்த ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட அரங்குகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணிஉள்ளிட்டவர்கள் இன்று ஆய்வு செய்தனர்.

மாட்டிறைச்சி பிரியாணி இலவசம்: இதற்கிடையே, பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி, இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆம்பூரில் உள்ள இறைச்சி விற்பனை கடைகள், அசைவ உணவு கடைகளில் ஆதரவு கேட்டு துண்டு பிரசுங்களை வழங்கினர்.

மேலும், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால், ஆம்பூர் பிரியாணி திருவிழா நடைபெறும் வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே மாட்டிறைச்சி பிரியாணியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என விசிக, எஸ்டிபிஐ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர்.

தற்காலிகமாக ஒத்திவைப்பு: இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், நாளை முதல் 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுகிறது என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.