மாணவர்களுக்கு ஏற்றார்போல பொறியியல் பாடத் திட்டத்தை 2 வகையாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் நிறைவுபெற்ற நிலையில், புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
3 முக்கிய முடிவுகள்
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.வேல்ராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக தொழில் துறையை உலகத் தரத்துக்குக் கொண்டுவருவது தொடர்பாக, உயர்கல்வித் துறைஅமைச்சரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அதில், 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொறியியல் படிப்பு சார்ந்த துறை வல்லுநர்கள், முதலில்ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். வல்லுநர்களின் கருத்தை உள்வாங்கிக் கொண்டு, மாணவர்களுக்குப் புரியும்படியாக ஆசிரியர்கள் வகுப்புகளில் கற்பிக்கவேண்டும். இந்த வழிமுறை முதல்கட்டமாகத் தொழில்நுட்பக் கல்வியில் அமல்படுத்தப்படும்.
தற்போதைய பாடத் திட்டம் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமேமுழுமையாகப் புரிகிறது. மீதமுள்ள 80 சதவீத மாணவர்களுக்குப் புரியவில்லை. எனவே, தற்போதைய பாடத் திட்டம் இரண்டு வகையாகப்பிரிக்கப்படும். ஆராய்ச்சி வழிமுறைகளுக்கு ஒரு வகையிலும், சமூகத்துக்குத் தேவையான தொழிற்கல்வி முறைக்கு மற்றொரு வகையிலும் பாடத்திட்டம் வகுக்கப்படும்.
நோபல் பரிசு பெறும் அளவுக்கு…
தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வகையில் பாடத் திட்டம் சீரமைக்கப்படும். உலகத் தரத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேவையான வசதிகளை தற்போது செய்தால்தான், 20 ஆண்டுகள் கழித்து அண்ணா பல்கலை. மாணவர்கள் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு உயர்வார்கள்.
துணைவேந்தராக நான் இருக்கும் 3 ஆண்டுகளும் தரமானக் கல்வியை வழங்க முழு முயற்சி மேற்கொள்வேன். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்உறுப்புக் கல்லூரிகளில் மின்சார வாகனங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார்