மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 15 முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெறும் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர 2022-23 கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப் படிப்புக்கான சியுஇடி தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கி மே 31-ம்தேதியுடன் நிறைவு பெற்றது.

இத்தேர்வுக்கு 9 லட்சத்து 50,804 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில், சியுஇடி நுழைவுத் தேர்வு ஜூலை 15-ம் தேதி தொடங்கும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சியுஇடி தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைநடத்த 56 மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், 30 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86உயர்கல்வி நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

நாடு முழுவதும் 554 நகரங்களில் ஜூலை 15 முதல் 20-ம் தேதி வரை மற்றும் ஆக.4 முதல் 10-ம் தேதி வரை என 2 கட்டங்களாக சியுஇடி தேர்வு நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பித்தவர்கள் தங்கள்விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இதுதொடர்பானகூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற இணைய தளத்தில்அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 / 69227700 ஆகிய எண்கள் மூலமாகவோ, cuet-ug@nta.ac.in என்றமின்னஞ்சல் வழியாகவே தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.