ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ‘ஐபோன் 13’ மாடல் போன் உற்பத்தியை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் டிஜிட்டல் சாதன பயனர்களிடையே பிரபலமானது, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள். செல்போன், லேப்டாப் என பல சாதனங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை ஆப்பிள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் இந்த உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இந்தப் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் நிறுவனங்கள் ஆப்பிள் ஐபோன்களின் பழைய மாடல் போன்களை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்களுக்காக இந்தியாவிலேயே இந்த போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளுக்கு இப்போதைக்கு இது ஏற்றுமதி செய்யப்படாது எனவும் தெரிகிறது.

இந்த சமீபத்திய அறிவிப்பின் மூலம் ‘ஐபோன் 13’ இந்தியாவில் உற்பத்தியானாலும் அதன் விலையில் மாற்றம் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. இருந்தாலும் இது ‘மேக்-இன்-இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.