தல வரலாறு, கட்டிடக்கலை சிறப்புகள் போன்ற விவரங்களை கோயிலின் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் தல வரலாறு, கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்கள் தற்போதைய நிலையில் பேனர்கள், கல்வெட்டுகள் மூலம் காட்சிபடுத்தப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மைத் திட்டத்தின் கீழ்கோயில்களின் அனைத்து விவரங்களும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, இத்திட்டத்தின் ஓர்அங்கமாக கோயில்களின் தல வரலாறு, கோயிலின் சிறப்பம்சங்கள், கட்டிடக்கலை சிறப்புகள், முக்கிய விழாக்கள் போன்ற விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோயிலின் நுழைவு வாயில்களில் விளக்கக்காட்சி மூலம் காட்சிப்படுத்தவும், கோயில்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெய்நிகர் காட்சி மூலம் கோயில் தொடர்பான விவரங்களை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வெட்டுத் தரவுகள்

மேலும், கோயிலின் அமைவிட வரைபடம் மற்றும் இணையதள விவரங்கள், கோயிலின் தொலைபேசி எண்கள், தொடர்பு நபர்களின் தொலைபேசி எண்கள், பயணவழித் தடங்கள், கோயிலின் தற்போதுள்ள முழுக்காட்சி, கோயில் புராண வரலாறு, கோயில் தல வரலாறு, கோயிலின் வரைபடம், கல்வெட்டுத் தரவுகள், சிற்பம் மற்றும் ஓவியக்கலை குறித்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலமாக விளக்க ஒளிக்காட்சியில் வெளியிட வேண்டும்.

இந்த விவரங்களை பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கோயில் நுழைவாயில்களில் விளக்க ஒளிக்காட்சி மூலம் காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கோயில்களின் இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.