சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த தாம்பரம் திருநீர்மலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் என்பவரே தற்கொலைக்கு முயன்றவர். வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களை மிரட்டுவதற்காக ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் பற்றி எரிந்ததால் இங்கும் அங்கும் ஓடியதால் அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடினர். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.