தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான விருது, ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநரும் சக்தி தேவி அறக்கட்டளையின் அறங்காவலருமான சாந்தி துரைசாமிக்கு கிடைத்துள்ளது. இவர் சக்தி மசாலா சமையல் நிறுவனத்தை கணவர் பி.சி.துரைசாமியுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

கடந்த 1977-ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

சக்திதேவி சாரிட்டபிள் டிரஸ்ட், சக்தி மறுவாழ்வு மையம், சக்தி மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி ஆட்டிசம் சிறப்புப் பள்ளி ஆகியவற்றை அரசு அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.

மேலும், சக்தி மருத்துவமனை மூலம் மருத்துவ சேவையும் வழங்கி வருகிறார். மேலும் பல கல்வி உதவிகளும் வழங்கி வருகிறார்.

மனிதநேயம் மிக்க சேவைகளுக்காக பல்வேறு தேசிய, மாநில விருதுகள் பெற்றுள்ளார். தற்போது சமூக சேவைகளுக்காக சாந்தி துரைசாமிக்கு, அவ்வையார் விருது அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சாந்தி துரைசாமிக்கு அவ்வையார் விருது வழங்கினார்.