காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேற்பார்வையில், தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, மெச்சத்தக்க வகையிலும் பணிபுரியும் போலீஸாரைக் கண்டறிந்து `மாதத்தின் நட்சத்திர காவல் விருது’க்குத் தேர்வு செய்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.5,000 வெகுமதி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த ஜனவரி மாதம் சிறப்பாகப் பணிபுரிந்த நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் பி.கந்தவேலு ஜனவரி மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று விருதை வழங்கினார்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் நுண்ணறிவு ஆய்வாளராகப் பணிபுரியும் கந்தவேல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்தும், குற்றப் பின்னணி உள்ள நபர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்தும், முக்கிய தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவித்தும், சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

அவரது தகவல்களால் அசம்பாவிதங்கள் நேரிடாமல் தடுக்கப்பட்டதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.