திருப்பூர் மாநகர் கொங்கு நகர் சரக போக்குவரத்து போலீசார் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நேற்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 33 வது சாலை பாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சாலை பாதுகாப்பு மாதத்தை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் கொங்கு நகர் சரக போக்குவரத்து போலீசார் நேற்று தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடத்தினர்

இந்த பேரணி புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டது.  இந்த பேரணியை கொங்கு நகர் சரக உதவி கமிஷ்னர் அனில்குமார், மாநகர காவல் கட்டுபாட்டு அறை உதவி கமிஷ்னர் சுப்பிரமணியம் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் போலீசார், பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பி.என்.ரோடு வழியாக சென்று மாநகராட்சியை அடைந்து, பின்னர் மீண்டும் அவிநாசி ரோடு வழியாக வந்து புதிய பஸ் நிலையத்தில் நிறைவு செய்தனர். இந்த பேரணியை கொங்கு நகர் சரக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகர் ஏற்பாடு செய்திருந்தார். பேரணியின் போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.