: அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளதாக ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலர் சம்பத் ராய் கூறியதாவது:- கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அங்கு 550-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர். கோயிலின் முதல் தளப் பணிகள் 2023 -ம் ஆண்டில் முடிவடையும். வரும் டிசம்பர் 21 மற்றும் 2024-ம் ஆண்டு மகர சங்கராந்திக்கு இடையே கோயிலில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். அடுத்த ஜனவரி 1 அல்லது ஜனவரி 14-ம் தேதிக்குள் பணிகள் நிறைவடையும்.

ராமர் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும்.தற்போதைய நிலையின்படி கோயிலில் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கோயிலில் 2 ராமர் சிலை கள் வைக்கப்படும். 1949-ல் கண் டெடுக்கப்பட்ட ராம் லல்லா சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்படும். மற்றொன்று மிக பிரம்மாண்ட ராமர் சிலையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ராமர் கோயில் கட்டுமானப் பணி திட்ட மேலாளர் ஜெகதீஷ் அஃப்லே கூறும்போது, ”தினமும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் திலகம் இடுவது போல பிரதிஷ்டை செய்யவுள்ளோம்’என்று தெரிவித்தார்.