நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். முக்கியமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான்நம் இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்திருந்தனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது பாகிஸ்தான்.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. போல்ட், சவுதி, ஃபெர்குசன், சான்ட்னர், சோதி போன்ற நியூசிலாந்து பவுலர்களின் பந்துவீச்சு இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை. தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி நேர்த்தியாக ரன்களை விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானும் 122 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

பாபர் 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஸ்வான், 43 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டானார். முகமது ஹாரிஸ், 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ஷான் மசூத், 3 ரன்கள் எடுத்தார். இஃப்திகார் ரன் ஏதும் எடுக்கவில்லை. 19.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது பாகிஸ்தான். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்டும், சான்ட்னர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

முன்னதாக, டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை அந்த அணி எடுத்தது. ஃபின் ஆலன், டெவான் கான்வே மற்றும் கிளென் பிலிப்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் வெளியேறி இருந்தனர்.

கேப்டன் வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மறுபக்கம் மிட்செல், 35 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் அவர் அரைசதம் விளாசி இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நவாஸ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்ட தருணம்: இந்த போட்டியில் கான்வே 21 ரன்கள் எடுத்தார். பவர்பிளே ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்று ஷதாப் கான் அடித்த டைரக்ட் ஹிட்டில் கான்வே ரன் அவுட்டானார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் திருப்புமுனை ஏற்படுத்திய தருணம் என அதனை சொல்லலாம். அதன் பிறகு ஆட்டம் முழுவதுமான பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான அரையிறுதியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.