இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்ட்டம் இயற்றப்படும்’’ என்று  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 30ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலின் சூடு தணிவதற்கு முன்பாகவே, புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, ‘‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்; அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’’ என்று விளக்கமளித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து புதிய தடை சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆகஸ்ட் 4ம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அதேநாளில் அறிக்கை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உடனடியாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ஆனால், அடுத்த இரு வாரங்களில் புதிய சட்டம் என்ற நிலையிலிருந்து மேல்முறையீடு என்ற நிலைக்கு அரசு மாறிவிட்டது” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு பதிலாக, அதிமுக அரசின் சட்டமே சரியானது என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக திமுக அரசு கூறும் காரணங்கள் தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் உயிர் பெற்றதற்கும், ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் காரணம் அதிமுக அரசு கொண்டு வந்த வலிமையற்ற சட்டம் தான் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சட்ட அமைச்சர் ரகுபதி வரை பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட பலவீனமான சட்டத்தை நம்பி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதும், இன்று வரை விசாரணைக்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாத அந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று நம்புவதும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது அதிசயங்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ், மேல்முறையீடு தான் தமிழக அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணர்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பாக தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யக் கோரி சட்ட ரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரும்போது மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.