நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

 திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒரு சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

அதை தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.