Site icon Metro People

‘பள்ளிகளில் பகவத் கீதையும், ராமாயணமும் கற்றுத்தர வேண்டும்’ – உத்தராகண்ட் கல்வி அமைச்சர்

உத்தராகண்ட் பள்ளிகளில் மாணவர்களுக்கு பகவத் கீதையும், ராமாயணமும், வேதங்களும் கற்றுத்தரப்பட வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் பேசியுள்ளார். அதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தின் வரலாறும், புவியியலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டூன் பல்கலைக்கழகம் சார்பில் ‘பரிக்‌ஷா பார்வ் 4.0’ என்ற நிகழ்ச்சியின் துவக்க விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார்.

குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தன்சிங் ராவத் பேசுகையில், “நாட்டிலேயே, புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவரும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் தான் இருக்க வேண்டும். அதனால் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். புதிய பாடத்திட்டத்தில் உத்தராகண்ட் இயக்கத்தின் வரலாறு சேர்க்கப்படும். மாநிலத்தின் பெரும் தலைவர்கள், இந்திய வரலாறு, பாரம்பரியம் ஆகியன இடம் பெறும். மேலும், உள்ளூர் கிராமிய மொழிகள் பற்றிய பாடங்களும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். உத்தராகண்ட் பள்ளிகளில் மாணவர்களுக்கு கீதையும், ராமாயணமும், வேதங்களும் கற்றுத்தரப்பட வேண்டும். அதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தின் வரலாறும், புவியியலும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தேர்வு முறை குறித்துப் பேசிய அமைச்சர், “மாணவர்களை இறுதித் தேர்வுக்கு ஆயத்தப்படுத்த மாதந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் மனநிலையைத் தயார் செய்ய வேண்டும். தேர்வை ஒரு திருவிழா போல் எதிர்கொள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடியின் ‘பரிக்‌ஷா பே சர்சா’ நிகழ்ச்சியின் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் உத்வேகம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைப்பது அவசியம்” என்றார்.

இந்நிலையில், இன்று (மே 2) மாநில கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பாடத்திட்டத்தில் வேதங்கள், உபனிதங்கள், கீதை ஆகியனவற்றை எப்படிச் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் உத்தராகண்ட் மாநிலத்திற்கு கூடுதலாக மத்திய அரசிடமிருந்து நிதி பெற இயலும். மாநில கல்வி வளர்ச்சிக்காக, 2022-23 நிதியாண்டில் சமக்ர ஷிக்ச அபியான் திட்டத்தின் மூலம் 1,100 கோடி நிதியைப் பெறலாம் என்று அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் வரும் மே 5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் சமக்ர ஷிக்‌ஷா அபியன் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தராகண்ட் மாநில பிரதிநிகள் செல்லவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version