பாடலாசிரியர் மதன் கார்க்கி, தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக, ‘ஸ்கிரிப்டிக்’ என்ற திரைக்கதை வங்கியை ஏற்படுத்தி உள்ளனர். திறமையான எழுத்தாளர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, நேர்த்தியான திரைக்கதைகளை, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வழங்க உருவாக்கப்பட்டது இந்த வங்கி. இதை இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்.

இதுபற்றி கோ.தனஞ்செயன் கூறும்போது, “திரைக்கதை நிபுணர்களின் பல்வேறு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் நல்ல திரைக்கதைகளைக் கண்டுபிடிப்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பெரிய சவால். அத்தகைய திரைக்கதைகளைப் பெற, நூற்றுக்கணக்கான கதை சுருக்கங்கள் அல்லது திரைக்கதைகளை அவர்கள் படிக்க வேண்டும். அந்த முயற்சியைக் குறைத்து, சிறந்த திரைக்கதைகளை மட்டுமே அவர்களுக்கு வழங்க நிபுணர்களின் பங்களிப்போடு ஸ்கிரிப்டிக் திரைக்கதை வங்கி தொடங்கப்படுகிறது. திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு முன்னோடி முயற்சியாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.