தமிழறிந்த ஒவ்வொருவரிலும் பாரதியார் வாழ்கிறார் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு எனப் புரட்சிகரமான பாடல்களை எழுதினார்.

பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று (செப்.11) அவரின் நூற்றாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினம் இனி ‘மகாகவி நாளாக’ அனுசரிக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை, மெரினா காமராசர் சாலையில் உள்ள பாரதியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பாரதி நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தன் ட்விட்டர் பக்கத்தில் பாரதியை நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “தமிழ் நிலத்திற்கென பெரும் கனவுகளைத் தந்துவிட்டுச் சென்ற பாரதி, தமிழறிந்த ஒவ்வொருவரிலும் வாழ்கிறார். அவரவர் துறையின் பாரதியாக முயல்வதே பெரும் கவிஞனின் நினைவைப் போற்ற ஆகச்சிறந்த வழி” எனப் பதிவிட்டுள்ளார்.