டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை மகளிர் மேம்பாடு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 36 வீராங்கனைகளுக்கு தருமபுரி, ஓசூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள 36 வீராங்கனைகள் சேர்ந்து டெல்லி முதல் கன்னியாகுமரி வரை சுமார் 6 ஆயிரம் கி.மீ. தூரம் மகளிர் மேம்பாடு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 8-ம் தேதி டெல்லியில் இப்பயணம் தொடங்கியது. அங்கிருந்து பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா வழியாக நேற்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் 36 வீராங்கனைகளும் தமிழக எல்லையான ஓசூர் வந்தனர். அவர்களுக்கு ஓசூர் மக்கள் சங்கம் சார்பில் சந்தன மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து கிருஷணகிரி, தருமபுரி, சேலம் வழியாகச் செல்ல புறப்பட்டு சென்றனர்.

தருமபுரி

இந்த குழுவினர் நேற்று தருமபுரி வந்தடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தக் குழுவினருக்கு தருமபுரியில் நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாது காப்புப் படை உயர் அலுவலர் யாதவ், முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.கே.சீனிவாசன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய பாதுகாப்புப் படையில் பெண் வீரர்கள் பங்கேற்கும் முதல் விழிப்புணர்வு பயணம் இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பயணக் குழுவினர் சேலம், கரூர், மதுரை வழியாக, வரும் 28-ம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர்.