3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளை மறுதினமே மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றது. இந்த 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் புறநகர் எல்லைகளில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒப்புதல் அளித்தது.

வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்த தொடர் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளிலேயே விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதற்கான மசோவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காவே அன்றைய தினம் ஆளும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.