இம்பால்: வக்பு மசோதாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மணிப்பூரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரின் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் முகமது அஸ்கர் அலி. இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவராக உள்ளார்.
இவரது வீடு தவுபால் மாவட்டம் லிலாங் சட்டப் பேரவைத் தொகுதியின் சம்ப்ருகோங் மேமேய் பகுதியில் அமைந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு மசோதா, சட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் முகமது அஸ்கர் அலி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உருட்டுக்கட்டை, கல், கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன் அஸ்கர் அலியின் வீட்டை சூழ்ந்துகொண்டனர். பின்னர் அவரது வீட்டைத் தாக்கி அவரது வீட்டுக்குத் தீவைத்தனர். அவரது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்து கும்பலை விரட்டியடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு 144 தடையுத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அஸ்கர் அலி வெளியிட்டுள்ள பதிவில், “நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு மசோதாவை நான் எதிர்க்கிறேன், அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்’’
என்றார்.