டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் சிறப்பு உணவு வழங்கப்படுவது குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ள நிலையில், அவர் தண்டனை பெறுவதற்குப் பதிலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தங்கியிருந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த செப்டம்பர் 13, 14, 21 ஆகிய தேதிகளில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் சமீபத்தில் பரவியது. அதில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடுகிறார். மற்ற 3 பேர் சத்யேந்தர் ஜெயினுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ வெளியானதை அடுத்து 12 அதிகாரிகள் திகார் சிறையில் இருந்து மாற்றப்பட்டனர்.

இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அது மசாஜ் அல்ல; பிசியோதெரபி சிகிச்சை என்று விளக்கம் அளித்தார். சத்யேந்தர் ஜெயினுக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு, சிறையில் நடக்கும் பிசியோதெரபி அமர்வில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில், திகார் சிறைத் துறை மூலம் இது குறித்து தகவல் வெளியானது. அதில், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ரிங்கு என்ற கைதி என்றும், 10வது படிக்கும் தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஆணடு கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறையில் பிசியோதெரபி அமர்வு என்று எதுவும் நடத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இது அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிறையில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், சரியான உணவோ, மருத்துவப் பரிசோதனையோ வழங்கப்படுவதில்லை என்றும் விசாரணை நீதிமன்றத்தில் சத்யேந்தர் ஜெயின் தனது வழக்கறிஞர் மூலம் முறையிட்டார். குறிப்பாக, தனது மத வழக்கப்படி சமைக்காத உணவு தனக்கு வழங்கப்படுவதில்லை என்றும், இதனால் 28 கிலோ எடை குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று மற்றொரு சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் பதிவான அந்த வீடியோவில், சத்யேந்தர் ஜெயின் சமைக்காத உணவை உண்ணும் காட்சி பதிவாகி உள்ளது. அதோடு, அவர் சிறைக்குச் சென்ற பிறகு 8 கிலோ எடை கூடி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவல்லா, சத்யேந்தர் ஜெயினுக்கு சிறை, தண்டனை அனுபவிக்கும் இடமாக இல்லை என்றும் சொகுசு வாழ்க்கைக்கான இடமாக உள்ளது என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். சிறையில் இருக்கும் ஒரு நபருக்கு இப்படி ஒரு வசதி கிடைத்தது எப்படி என்பது குறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.