குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை உருவக் கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் பகுதியில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அகில் கிரி, மக்கள் மத்தியில் பேசும்போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் நிறத்தை வைத்து உருவக் கேலி செய்தார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரை உருவக் கேலி செய்த அமைச்சரின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய பழங்குடியின அமைச்சருமான அர்ஜூன் முண்டா, “அகில் கிரியின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. முதல்வர் மம்தா பானர்ஜி, அவரை தனது அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் இவ்வாறு பேசியதற்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேற்கு வங்க முதல்வர் ஒரு பெண். அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர், பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவரை வெறுக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார். இதை அனுமதிக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக ஆகி இருப்பதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே அகில் கிரியின் பேச்சு காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த பாஜக தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதானும், அகில் கிரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “நாட்டின் முதல் குடிமகளை, அகில் கிரி அவமதித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறிதளவேனும் நியாய உணர்வும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் இருக்குமானால் அவர் உடனடியாக தனது அமைச்சரவையில் இருந்து அகில் கிரியை நீக்க வேண்டும். பாலின, நிற சகிப்பின்மைக்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை. பெண்ணான மம்தா பானர்ஜி, அகில் கிரி மீது நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தனது பேச்சு சர்ச்சையாகியதை அடுத்து அது குறித்து அகில் கிரி விளக்கம் அளித்துள்ளார். அதில், “மேற்கு வங்க பாஜக தலைவரான சுவேந்து அதிகாரி, நான் பார்ப்பதற்கு மிக மோசமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பதில் அளிக்கும் நோக்கிலேயே நான் அவ்வாறு பேசினேன். அதேநேரத்தில், நான் திரவுபதி முர்முவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. அவர் மீது எனக்கு மதிப்பு இருக்கிறது. குடியரசுத் தலைவரை நான் அவமதித்துவிட்டதாக அவர் எண்ணினால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அகில் கிரியின் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், “அகில் கிரியின் பேச்சு கட்சியின் கருத்து அல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் மீதும் குடியரசுத் தலைவர் மீதும் மிகப் பெரிய மதிப்பை திரிணமூல் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. பெண் முன்னேற்றத்தின் அடையாளமாக மம்தா பானர்ஜி திகழ்கிறார். எனவே, அகில் கிரியின் பேச்சை திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. அமைச்சர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அரசியல் செய்ய வேறு எதுவும் இல்லாததால், இதுபோன்ற மலிவான அரசியலை அது செய்கிறது. மேற்கு வங்கத்தில் அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்குவதன் மூலம் அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

இதனிடையே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி, ஆளுநர் இல.கணேசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து அகில் கிரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அகில் கிரியின் பேச்சு தொடர்பாக நாளையோ அல்லது நாளை மறுநாளோ நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.