டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹிட்லருடன் ஒப்பிட்டு டெல்லி பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பக்கா. இவர், டெல்லியின் காற்று மாசு விவகாரம் குறித்து டெல்லி பாஜக அலுவலகம் முன்பு, அம்மாநில முதல்வர் கேஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒன்றை வைத்துள்ளார். அந்த போஸ்ட்டரில், ‘தான் வாழும் நகரினை விஷவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் உலகின் இரண்டாவது தலைவர் கேஜ்ரிவால். முதலமாவர் ஹிட்லர்’ என்ற வாசகத்துடன், பொது நலன் கருதி தஜேந்திர பால் சிங் பக்கா என்று தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தஜிந்தர் பால் சிங் பக்கா அளித்த பேட்டி ஒன்றில், “நான் அவரை ஹிட்லருடன் ஒப்பிட்டேன். தாங்கள் வாழும் நகரத்தை விஷவாயு கிடங்காக மாற்றியிருப்பதற்கு இது இரண்டாவது உதாரணம். இதனை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. டெல்லியில் காற்று மாசினால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் வேளையில், அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்திற்கும், இமாச்சலப் பிரதேசத்திற்கும் அரசியல் சுற்றுலா சென்றுகொண்டிருக்கிறார்” என்றார்.

முன்னதாக,பஞ்சாப் பண்ணைகளில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்த தவறியதற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை, டெல்லி லெப்டினட் கவர்னர் செக்சேனா குற்றம்சாட்டினார். அப்போது விஷவாயு கிடங்கு என்ற பதத்தை பயன்படுத்திய ஆளுநர், இந்தச் சூழல் மக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

தீபாவளிப் பண்டிகையின்போது தடையை மீறி சட்டவிரோதமாக பட்டாசு வெடித்தல், கட்டிட கழிவுகளில் இருந்து வெளியேறும் தூசு, வாகனங்கள் வெளியேற்றும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளின் புகை போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் டெல்லி காற்று மாசுவினால் திணறியும் அதனை தடுக்க வழிதெரியாமல் தவித்தும் வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019- ம் ஆண்டு காற்று மாசு குறித்து டெல்லி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞர் டெல்லி விஷவாயு கிடங்கு போல மாறிவிட்டது என்று குறிப்பிட்டதை நீதிபதி தீபக் குப்தா ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக மோசம் என்ற நிலையிலேயே தொடர்கிறது. இதன் காரணமாக, காற்றின் தரம் மேம்படும் வரையில் சனிக்கிழமை முதல் டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்றும் டெல்லி அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, “இந்த மாசுபாடு என்பது டெல்லியின் பிரச்சினை மட்டும் கிடையாது. அது ஒட்டுமொத்த வடக்கின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் இருந்து வட இந்தியா வெளிவருவதற்கு மத்திய அரசு தானாக முன்வந்து சில திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த சிக்கலான உணர்வுமிக்க பிரச்சினையில் அரசியல் பார்க்கக் கூடாது. பஞ்சாப்பில் விவசாயக கழிவுகள் எரிக்கப்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.