அமைச்சர் செந்தில்பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என்றும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கோவை மாநகருக்கு நேற்று வந்த மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பாஜக மீதும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தீபாவளிக்கு முந்தைய தினம் அதிகாலை, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறியதில் ஜமேசா முபின் உயிரிழந்தார். தீபாவளி நாளில் கோவையை தகர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்தது.

ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 75 கிலோ வெடிப் பொருட்கள் உள்ளிட்ட தகவல்கள் மக்களின் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தன. கோவையில் எந்த பதற்றமும் இல்லை. எல்லாம் இயல்பாகவே இருக்கிறது. பாஜகதான் அரசியல் செய்து வருகிறது என அமைச்சர் கூறியிருக்கிறார். கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. இயல்பு நிலைதான் நீடிக்கிறது என்றால் 3,000 போலீஸார் ஏன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் ? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்?

அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை அறியாமலேயே, ‘கோவை பதற்றத்தில் இருக்கிறது. இயல்பு நிலை இல்லை’ என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 3,000 போலீஸார் குவிக்க வேண்டிய அளவுக்கு, 40 சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டிய அளவுக்கு, மாநில காவல்துறையால் விசாரிக்க முடியாமல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமான தால்தான், வரும் 31-ம் தேதி திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

முழு அடைப்பு போராட்டம் என்பது ஜனநாயக வழியிலான அறப்போராட்டம். அமைச்சரின் மிரட்டலுக்கு எல்லாம் பாஜக ஒருபோதும் அஞ்சாது. இந்த மிரட்டல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சி பாஜகதான். இதுவரை 200 நிர்வாகிகளை பாஜகவும், ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன. 1998-ல் கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அப்போதும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் இருந்தது. இப்போதும் திமுக ஆட்சியில் தான், மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறுபான்மை வாக்கு வங்கிக்காக, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறை கூடாது. இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை. அதனை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி திங்கட்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.