2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பாஜக மாவட்ட அலுவலகத் திறப்பு விழா திருப்பூர் வித்யாலயம் பகுதியில் நேற்று ( நவ. 24) நடந்தது. இதில் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நேரில் பங்கேற்றார். தொடர்ந்து, திருப்பூர் கட்சி அலுவலகத்தைத் திறந்தவர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்ட அலுவலகங்களைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டிப் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி வரவேற்றார். சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகப் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, சி.டி.ரவி, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, ”பாஜகவில் 18 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளோம். பாஜகவால் கண்டெடுக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையாக உயர்ந்து, இன்றைக்கு மத்திய அமைச்சராக எல்.முருகன் உள்ளார். நயினார் நாகேந்திரன் அதிமுகவை விட்டுவிட்டு, இன்றைக்கு பாஜகவில் சேர்ந்து பாஜகவில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக உள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைய வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி மலரும். 118 கோடி டோஸ், இந்தியாவிலேயே தயாரித்து தடுப்பூசியை அனைவருக்கும் மோடி வழங்கி உள்ளார். இது மிகப்பெரிய சாதனை. வரும் உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற, இந்த அலுவலகக் கட்டிடங்கள் நமக்குப் பயன்படும்” என்றார்.