கரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களே முதலிடத்தில் உள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் டோஸை 90 சதவீத மக்களும், 2வது டோஸை 50 சதவீத மக்களும் செலுத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பூசிகூட 90 சதவீதத்தை எட்டவில்லை. 2-வது டோஸ் 50 சதவீதத்தைக் கூட தொடவில்லை எனத் தெரியவந்துள்ளது.

பாஜக ஆளும் 7 மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பூசியை 90 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர், 2-வது டோஸ் தடுப்பூசியை 50 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர்.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல் டோஸ் தடுப்பூசியை 66.2% மக்களும், 2-வது டோஸை 30.8% பேரும் செலுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 72.5 % மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோஸ் 32.8% பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

திமுகஆட்சி செய்யும் தமிழகத்தில் முதல் டோஸ் 78.1 % மக்களுக்கும், 2-வது டோஸ் 42.65 % பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ்,சிவசேனா, என்சிபி கட்சிகள் ஆளும் மகாராஷ்டிராவில் முதல்டோஸ் தடுப்பூசி 80.11 சதவீத மக்களுக்கும், 2-வது டோஸ்ட 42.5% பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் டோஸ் 83.2% பேருக்கும், 2-வது டோஸ் 47.2 சதவீதம் மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானில் 84.2% பேர் முதல் டோஸையும், 46.9 சதவீதம் பேர் 2-வது டோஸையும் செலுத்தியுள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை 86.6 சதவீத மக்களும், 2-வது டோஸை 39.4 % மக்களும் செலுத்தியுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில், இமாச்சலப்பிரதேசம், கோவா மாநிலம் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திவிட்டன. இமாச்சலப்பிரதேசம் 2-வது டோஸில் 91.9% செலுத்தியுள்ளது, கோவா மாநிலம், 87.9 % 2-வது டோஸை செலுத்தியுள்ளன.

குஜராத் மாநிலம் 93.5 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது, 2-வது டோஸை 70.3 சதவீதம் பேருக்கு செலுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 93 சதவீதம் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசிையயும், 61.7% 2-வது டோஸையும் செலுத்தியுள்ளனர்.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதல் டோஸ் தடுப்பூசியை 92.8% மக்களும், 2-வது டோஸ் தடுப்பூசியை 62.9% மக்களும் செலுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 90.9%மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், 59.1% மக்கள் 2-வது டோஸ் செலுத்தியுள்ளனர். ஹரியானாவில் 90.04 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 48.3 சதவீதம் பேர் 2-வது டோஸையும் செலுத்தியுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் 88.9% மக்கள் முதல் டோஸையும், 50 சதவீதம் 2-வது டோஸையும் செலுத்தியுள்ளனர். திரிபுராவில் 80.5 சதவீதம் முதல் டோஸையும், 63.5 சதவீதம் 2-வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்