உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக் கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், ஏபிபி, சி-வோட்டர், ஐஏஎன்எஸ் சார்பில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் கூறியிருப்பதாவது:

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். குறிப்பாக பாஜகவுக்கு 41.8 சதவீத வாக்குகள் கிடைக்கும். கடந்த 2017 தேர்தலில் இக்கட்சிக்கு 41.4 சதவீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி 30.2 சதவீதம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 15.7 சதவீதம் வாக்குகளே கிடைக்கும்.

கடந்த தேர்தலில் 6.3 சதவீத வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தலில் 5.1 சதவீத வாக்குகளே கிடைக்கும்.

பாஜக கூட்டணி 263 இடங்களில் வெற்றி பெறும். இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஆகும். எனினும், இக்கூட்டணி கடந்த தேர்தலில் 325 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.