ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரமின்றி கருத்துகளை கூறியுள்ளதால், இப்போதைக்கு அந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையில் 6-ம் வகுப்பு வரை தமிழ்தான் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதை திமுக அரசு ஏற்காதது ஏன்? தமிழை வளர்க்க எதுவும் செய்யாத திமுக அரசு, இந்தியை வைத்து அரசியல் செய்கிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 27-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திமுக தலைவர்கள் நடத்தும் எந்தெந்த பள்ளி, கல்லூரிகளில் இந்தி 3-வது மொழியாக நடத்தப்படுகிறது என்று அதில் வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, அவருக்கு மேல்உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்ததை பாஜக ஏற்காது. ஆணைய அறிக்கையை அரசு அப்படியே ஏற்காமல், முழுமையாக ஆராய்ந்து, போராட்டத்தை தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் தண்டிக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஆணையம் கூறிய கருத்துகளை பாஜக கண்டிக்கிறது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, துப்பாக்கிச்சூடு நடந்தது தொடர்பாக வார்த்தையை மாற்றிக் கூறினார் என்பதை ஏற்க முடியாது.
ஜெயலலிதா இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அப்போதைய சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது அரசியல் பார்வையை முன்வைத்துள்ளது. அவ்வாறு பார்த்தால் எந்த அதிகாரியும் இக்கட்டான சூழலில் பணியாற்ற மாட்டார்கள். எனவே, அதில் எங்களுக்குஉடன்பாடு இல்லை. ஆணையம்ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாகவே கருத்துகளை கூறியுள்ளது. எனவே, இப்போதைக்கு அந்த அறிக்கையை ஏற்கவில்லை.
தமிழகத்தின் கடன் ரூ.6 லட்சம்கோடியை தொடுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கடனை அடைப்போம் என்று தமிழக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? சிஏஜி கூறியிருப்பது ஓர் அபாய மணி. மாநில அரசு தனது நிர்வாக முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே, மக்கள் அதிக பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும்.