சென்னை: ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பாதிப்புகள் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறைத்தும் தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் டாக்டர். செளந்தரராஜன்

ஒவ்வோர் ஆண்டும் மே 17-ம் தேதி ‘உலக ரத்த அழுத்த தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ரத்த அழுத்த நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறார், சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரகவியல் துறை பேராசிரியர் டாக்டர். செளந்தரராஜன்:

“பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம். ஆனால், தற்போது 125/85 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்த அறிகுறியாக கருதப்படுகிறது. மரபு வழி ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, நாளமுள்ள சுரப்பிகள், உடல் பருமன் அதிகரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்டவை ரத்த அழுத்தம் வர முக்கியக் காரணங்கள் ஆகும். கடல் அலை போன்று காலையிலிருந்து மாலை வரை ரத்த அழுத்தம் மாறுபட்டு கொண்டே வரும்.

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் ஆகும்.

தமிழக அரசு எடுத்துள்ள ஆய்வின்படி 10 -ல் 3 பேருக்கு ரத்த அழுத்தமும், 5-ல் ஒருவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பது, பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளவது, காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தீடீர் இதய அடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு வருவதற்கு முக்கிய காரணமாக ரத்த அழுத்தம் இருக்கும். எனவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொண்டு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.