கனியாமூரில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியில் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்தவாரம் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மாணவியின் மரணத்துக்கு நியாகம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை வன்முறையில் முடிந்தது.

மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் தாங்கள் கூறும் மருத்துவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், மாணவியின் உடலை எப்போது பெற்றுகொள்வீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  இதையடுத்து இன்று பெற்றுகொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மாணவியின் உடல் இன்று காலை 7 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கொண்டு வரப்பட்டது. பின்னர், அஞ்சலிக்காக குளிர்சாதன பெட்டியில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை பார்த்த உறவினர்கள், ஊர் மக்கள் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதை தொடர்ந்து மாணவியின் உடல் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலகத்தில் ஏராளமானோர் உடன் வந்தனர். அப்போது, கொலைகாரனை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் அவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் எனது மகளே அவனை அழிப்பான்’ என மாணவியின் தந்தை கூறியபடியே வந்தார்.

மாணவியின் சடலத்தோடு அவருக்கு பிடித்த உயிரியல் பாடப்புத்தகமும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது.  இதை தொடர்ந்து மயானத்துக்கு கொண்டுவரப்பட்ட மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  றுதி சடங்கில் மாவட்ட அமைச்சர் சி.வி கணேசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.