இந்து என்பது மதம் அல்ல; நெறி. அது ஒரு வாழ்வியல் முறை. அதை யாரும் சுருக்கிவிட முடியாது. இந்து என்பது மதம் இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

‘ஓங்காரம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மோகன்.ஜி, ”தமிழக மக்களுக்கு இதற்கு முன்பு வரலாறு குறித்து பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு தான் சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்ப்பட்டுள்ளது. இது சிலருக்கு பயத்தை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு வரலாறு குறித்து யாரும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியதில்லை. தற்போது இந்த வரலாறு மூலம் புரிதல் வந்தால் பலராக பிரிந்திருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியிருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ அதை நிகழ்த்திக் காட்டியுள்ளது. இதனால் பல சர்ச்சைகள் உருவாகியுள்ளது.

இந்து அறநிலையத் துறை என பெயர் வைக்கக் கூடாது என கூறியிருக்கிறார்கள். அது தமிழக அரசின் முடிவு. அதனை யாரும் மாற்ற முடியாது. இந்து மதம் அல்ல; நெறி. அது ஒரு வாழ்வியல் முறை. அதை யாரும் சுருக்கிவிட முடியாது. இந்து மதம் இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது. ராஜ ராஜ சோழனை ஒரு மதமாக சுருக்கிப் பார்க்க முடியாது. அவரை வெறும் சைவம் என கூறினால், அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். சங்க காலத்தில் இந்து என்ற பெயர் இருந்துள்ளது. நான் வேண்டுமானால் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன்.

‘திரௌபதி’ வெற்றி பெற்ற பிறகு அன்றிலிருந்து வலதுசாரி, நடுநிலை என பேச ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்தடுத்து சேரர்கள், பாண்டியர்கள் வரலாறு தமிழ் சினிமாவில் வரும். ‘பகாசூரன்’ என்பது மகாபாரத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். அதை நான் எப்படி காட்டியிருக்கிறேன் என்பது குறித்து நீங்கள் நவம்பர் மாதம் படம் வரும்போது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ‘பகாசூரன்’ தமிழ் சினிமாவில் பெரிய விவாத்தத்தை கிளப்பும்” என தெரிவித்துள்ளார்.