திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்தில் இன்று வரை(நேற்று) பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்களாக 5 லட்சத்து 52 ஆயிரத்து 754 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் என்ற இலக்கை தொட இருக்கிறது.

எனவே, இந்த 10 லட்சம் பேருக்கும் ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்காக வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக பூஸ்டர்டோஸ்க்கும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது தமிழகத்தில்தான்.

சனிக்கிழமை தோறும் தமிழகம் முழுவதும் இதுவரை நடைபெற்ற 18 சிறப்பு முகாம்களின் மூலம் 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 751 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பூந்தமல்லி பொதுச் சுகாதார நிறுவன வளாகத்தில் தனியார் குளிர்பான நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு நிதியின்கீழ், ரூ.32.67லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, நிமிடத்துக்கு 50 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பிறகு, அவர், பூந்தமல்லி அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரங்களைச் சரி பார்த்து, பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வுகளில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள் வினய்குமார் (தடுப்பூசி), சம்பத் (கொள்ளைநோய் தடுப்பு), மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், பூந்தமல்லி, மதுரவாயல் எம்எல்ஏக்களான கிருஷ்ணசாமி, கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.