இந்தியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி 9 மாதங்கள் முடிந்திருந்தால் பூஸ்டர் டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 185 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதுக்கு மேற்பட்ட 96 சதவீத பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 83 சதவீத பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இதைத்தவிர்த்து முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் 2.4 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், முன்களப் பணியாளர்கள் அல்லாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 2வது டோஸ் செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது வரும் 10 ஆம் தேதி (ஏப்.10) முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு மையங்களில் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின் படி முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் செலுத்தப்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.