கொடைக்கானல் மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலைப் பூண்டு சாகுபடி பரப்பை இந்த ஆண்டு அதிகரிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை முடிவு செய்துள்ளது. மலைப்பூண்டுக்கு என பிராண்ட் பெயர் உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பூண்டு விளைச்சலுக்கு ஏற்ற குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மலை கிராமங்களான கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மலைப்பூண்டு சாகுபடி நடைபெறுகிறது.

பயிரிட்ட 120 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பயிரி டப்பட்டு வரும் பாரம்பரிய வகை மற்றும் மருத்துவ குணமிக்க பூண்டு என்பதால், கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசார் குறி யீடும் வழங்கப்பட்டுள்ளது.

சாகுபடியை அதிகரிக்க திட்டம்

 

கொடைக்கானல் மலைப்ப குதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும், காரத்தன்மை அதிகம். பத்து மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் 734 வகை யான பூண்டு வகைகளில் கொடைக்கானல் மலைப்பூண்டு முதன்மையாகக் கருதப்படுகிறது.

இத்தகைய மலைப்பூண்டை தற்போது விளைவிக்கப்படும் சாகுபடி பரப்பைவிட அதிக பரப்பில் விளைவிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

இந்த ஆண்டு பூண்டு சாகுபடி பரப்பை தமிழகம் முழுவதும் 500 ஹெக்டேர் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஏற்கெனவே ஆயிரம் ஹெக்டேரில் மலைப் பூண்டு சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு சாகு படி பரப்பு 300 ஹெக்டேர் அதி கரிக்கப்படும். இதன் மூலம் பூண்டு விவசாயிகள் பயன் பெறுவர். கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு என பிராண்ட் பெயர் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவுத் திட்டமும் செயல்படுத்தப்படும். கொடைக்கானலில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது அதிகரித்துள்ளது, என்று கூறினார்.