சாமியார்மடம்: சாமியார்மடம் சந்திப்பு பகுதியில்  தேசிய நெடுஞ்சாலையில்  பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் நேற்று மதியம் திடீரென உடைப்பு ஏற்பட்டது.  இரைச்சலோடு சுமார் 25 அடி உயரத்திற்கு  நீரூற்று போல் தண்ணீர் பீறிட்டு பொங்கியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும்  வெள்ளக்காடாக மாறியது.  குழாயில்  உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு  அருகே மின்சார கம்பி செல்கிறது.  தண்ணீர் மின் கம்ப உயரத்துக்கு  பீய்ச்சி அடித்தது என்றாலும் மின்சார வயரில் படவில்லை. என்றாலும்  அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று பொதுமக்கள் அஞ்சினர்.

உடனே இது பற்றி  மின்வாரியம் மற்றும்  காட்டாத்துறை ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தனர்.  ஊராட்சி தலைவர்  இசையால் பொதுப்பணித்துறை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு  தகவல் கொடுத்தார்.   குடிநீர் திட்டத்திற்காக தேசிய நெடுஞ்சாலையை உடைத்து ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னரே மீண்டும் அந்த சாலை போடப்பட்டது.   அது தரமாக போடப்படாததே இந்த உடைப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் கூறினர்.