சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பிரதமர் மோடியிடம் நேர்மை இல்லை என பாஜக எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
அகமதாபாத் மேற்கு தொகுதி பாஜக எம்.பி. கிரித் பிரேம்ஜிபாய் சோலான்கி தலைமையிலான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அவுட்சோர்சிங் மூலம் ஆள் சேர்க்கப்பட்டதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாததைச் சுட்டிக்காட்டி இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவில் 30 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் பாஜக எம்.பி.க்கள். இந்தக் குழு தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஆட்களைப் பணியமர்த்துவதில் இட ஒதுக்கீட்டை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள் மூலம் சில பணியாட்களை நியமித்து வருகிறது. இருந்தாலும் பிஎஸ்என்எல்தான் முதன்மைப் பணி வழங்குநர் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிஎஸ்என்எல் தரப்பில் அரசு அளித்துள்ள பதிலில், பிரதான பணி வழங்குநர் என்ற அடிப்படையில் பிஎஸ்என்எல் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா, அவர்களின் பணியிடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது.
அதே வேளையில், ஒப்பந்ததாரர்கள் பணியாளர்களைப் பணியமர்த்தும்போது எஸ்.சி., எஸ்.டி., இட ஒதுக்கீட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்களைப் பணியமர்த்த வேண்டும் என்று எந்தவித உத்தரவையும் பிறப்பிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிலை மையமாகக் கொண்டே, நாடாளுமன்ற நிலைக்குழுவானது, தற்போதைய மோடி அரசுக்கு, ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி அமர்த்தப்படுவோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் நேர்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஓர் அரசாங்கமானது ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் செயல்பட வேண்டும். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நேர்மையாகச் செயல்படுத்த வேண்டும். அது, நேரடிப் பணி நியமனமாக இருந்தாலும் சரி ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கப்படும் வேலையாக இருந்தாலும் சரி, இட ஒதுக்கீட்டை முறையாக உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு அரசாங்கம் தொகுப்பூதியம் வழங்குகிறது. அந்தத் தொகுப்பூதியம் பிஎஸ்என்எல் அங்கீகாரத்துடனேயே வழங்கப்படுகிறது. அப்படியென்றால் இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதும் பிஎஸ்என்எல்லின் பொறுப்பே என்று தெரிவித்துள்ளது.
அண்மையில், அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பேட்டியில் ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்ஸ் வேலையாட்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.