மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு நேற்று எழுதியகடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி, அதிகாரம் வழங்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பஞ்சு, இரும்பு, தாமிரம், பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டு்ம். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும். முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளையும் ரூ.3 ஆயிரமாக உயர்த்திவழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.